11 நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து

0
83

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் குணப்படுத்துவதற்கான முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்தச் சூழலில் விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது ரெம்டெசிவியர் என்ற மருந்து. கொரோனா வந்தால் மரணம்தானா, நோய் எதிர்ப்பு ஆற்றல் இருந்தால் மட்டும்தான் பிழைக்க முடியுமா, வயதானவர்களுக்கு பிழைக்க முடியாதா என்றெல்லாம் இருளடைந்த கேள்விகள் நிறைந்திருக்கும் சூழலில், ரெம்டெசிவியர் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக பல்வேறு மருந்துகளை உலக நாடுகள் பரிசோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் அமைப்பின் தலைவர் அந்தோனி பவுச்சி ஒரு முக்கியமான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். அதில் கொரோனா பாதித்த சுமார் ஆயிரம் பேருக்கு ரெம்டெசிவியர் மருந்தைக் கொடுத்ததில், அவர்கள் 11 நாள்களில் குணமடைந்ததாக அவர் அறிவித்தார். எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாதவர்கள் வெறும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மூலமாகக் குணமடைவதற்கு குறைந்தது 15 நாள்கள் ஆகும் நிலையில், ரெம்டெசிவியர் அவர்களை 11 நாள்களில் கொரோனாவில் இருந்து விடுபடச் செய்துள்ளது.

இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் இறப்பு விகிதமும் மிகக் குறைவாகவே இருந்தது. ரெம்டெசிவியர் நூறு சதவிகிதம் கொரோனாவைக் கொல்லும் மருந்தல்ல. ஆனால் குணமடையும் வேகத்தை 31 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தாக அளிக்கப்பட இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கொரோனாவுக்கு எதிரான ஆற்றலை உடலுக்கு அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் இதுமட்டுமே கொரோனாவுக்கு மருந்தாக அமைந்துவிடாது. ரெம்டெசிவியர் தயாரிக்கும் கிளேட் (Gilead) நிறுவனம், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் மட்டுமே இதை அளித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்க வேண்டுமெனில் 31 சதவிகிதம் அல்ல, 100 சதவிகிதம் நம்பகமான சிகிச்சை மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் தயாரிக்கப்பட வேண்டும்; அவை ஏழை நாடுகள் உள்பட உலகம் முழுவதும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.

#புதிய தலைமுறை செய்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here