ஷானி கைதானது ஏன்..?

0
48

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை 7.05 மணியளவில், கொழும்பு – நாரஹேன்பிட்டி, எல்விட்டிகல மாவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் அமைந்துள்ள ஷானி அபேசேகரவின் வீட்டுக்கு சென்ற சி.சி.டி.யின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா தலைமையிலான குழுவினர் அவரைக் கைது செய்தனர்.

கடந்த ஜூன் 24 ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய விஷேட உத்தரவுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து சார்ட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்டும் மேலும் இரு சி.ஐ.டி. முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு வலை விரித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்கடடினார்.

வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து வாச் குணவர்தன உள்ளிட்ட 7 பேர், வாச் குணவர்தனவின் மனைவி சமிலா பிரியதர்ஷனி பெரேரா அகிய 8 பேருக்கு எதிராக, அபயாகரமான ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் தனியாக வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு வந்தது.

பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைது செய்திருந்த சி.ஐ.டி., அவரிடம் தடுப்புக் காவலில் செய்த விசாரணைக்கு அமைய கம்பஹா வெலிவேரிய பகுதியில் கண்டுபிடித்ததாக கூறப்படும் ஆயுத கிடங்கு தொடர்பில் அந்த 8 பேருக்கும் எதிராக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் இருந்தது.

இதன் போது அவ்வழக்கில் சாட்சியாளர்களாக இருந்த ஆயுத கிடங்கு இருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி உள்ளிட்ட இருவர் உள்ளிட்ட சாட்சியாளர்களை சந்தேக நபர்களாக மாற்றி நீதிமன்றில் ஆஜர் செய்யவும், குற்றம் சுமத்தப்பட்டிருந்த 8 பேரையும் விடுவிக்கவும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அண்மையில் சி.ஐ.டி. பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

குறித்த விவகாரத்தில், ஏற்கனவே வாச் குனவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக சாட்சியம் வழங்கிய பொலிஸ் பரிசோதகர், தான் சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர உள்ளிட்டவர்களின் கட்டளைக்கு அமையவே அவ்வாரு செயற்பட்டதாகவும், ஆயுதங்களை விசாரணையாளர்களே வைத்துவிட்டு மீள எடுத்ததாகவும் தனது சாட்சியை மாற்றிய நிலையிலேயே அவ்வழக்கில் குறித்த நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான பின்னனியிலேயே, பதில் பொலிஸ் மா அதிபர், இவ்வாறான சாட்சி உருவாக்கம் இடம்பெற்றதா என விசாரிக்க சி.சி.டி.க்கு கட்டளையிட்டுள்ளார். அதன்படி முன்னெடுத்த விசரணையிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய இரு சி.ஐ.டி. அதிகாரிகளையும் கைது செய்ய காலி, அனுராதபுரத்துக்கு இரு பொலிஸ் குழுக்கள் இன்று மாலையாகும் போதும் அனுப்பப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here