யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானம்!

0
236

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து மேற்படி கூட்டம் இடம் பெற்றுள்ளது.

மேலும் இக் கூட்டத்தில் மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (Sri Lankan Police Cyber crime unit) ஊடாக விசாரணை நடத்தல் மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடி வதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த முறைப்பாடு தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி வளாகத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுக்கப் பயணமாகினர்.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களையும் வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அவர் வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here