மஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு – நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்

0
97

ராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் இன்று பூதாகரமான பேசுபொருளாகி உள்ளது.

கடந்த அரசில் இருந்தவர்களா , இந்த அரசில் இருப்பவர்களா இதனை தீர்க்கவேண்டும் என நாம் நமக்குள் விரல் நீட்டுவதை விட விரைந்து இதற்கு முடிவுகண்டாக வேண்டும்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்புகளுக்குப் பிறகான நீதித்துறை சார்ந்த விஷயங்களில் தாருஸ்ஸலாமில் இருந்து இயங்கிய முஸ்லிம் காங்கிரஸின் அஙகத்தவர்களுள் ஒருவன் என்பதால் , முஸ்லிம் காங்கிரஸின் மீது விரல் நீட்டுபவர்களுக்கு சில விடயஙகள் தெளிவுபடுத்த இப்பதிவைக் இடுகிறேன்.

இப்படி ஒரு பிரச்சினை இருந்தது பற்றி நான் இன்றுதான் அறிந்தேன்.
குறிப்பிட்ட பள்ளியின் நிர்வாக் குழுவின் தலைவரான துவான் ஹாபிள் என்பவருடன் தொடர்புகொண்டு விசாரித்தேன்.

இது சம்பந்தமாக அவர் முன்னாள் அமைச்சர்களான பௌசி,ஹக்கீம், கபீர் போன்றோரை அறிவுறுத்தவில்லை என்றார்.

வக்பு சபை ஊடாக அப்போதைய நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சர் தலதா அதுகோரள அவர்களை சந்தித்து கதைத்தார்களாம்.

பிறகு என்ன நடந்தது, நடக்கிறது என்பன பற்றி பள்ளி நிர்வாகிகள் சரியான பின்பற்றல் ஒன்றை செய்திருப்பதாக அறிய முடியவில்லை.
அல்ஹம்துலில்லாஹ் நாளை இவ் அரசின் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஊடாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக சொன்னார்.

யாவும் நல்ல விதமாக நடந்தேற துஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் காலையில் சகோதரர் ஹக்கீமை சந்தித்து இதுவிடயமாக எம்மால் முடியுமான அனைத்தையும் செய்யலாம் என்றிருக்கிறேன்.

இதுபற்றிய விபரங்களை காலநேரத்தோடு அறிந்துகொள்ளாதது எமது தவறே. அதேபோல் இதனை பொறுப்புவாய்ந்தவர்களின் கவனத்திற்கு உரிய காலத்தில் கொண்டு வராமை பள்ளி நிர்வாகிகளினதும் கவனக்குறைவாகும்.

நாம் இதுவிடயத்தை பூதாகரமாக்கி தேவையற்றவிதமாக அரசை விமர்சித்தும், இனவாத பதிவுகளை இடுவதில் இருந்தும் தவிர்த்து கொள்வது , இதற்கு விரைவில் தீர்வுபெற உதவும்.

வெண்ணெய் திரளட்டும் , நாம் தாளியை உடைக்காமல் அமைதி காப்போம். சாயந்தமருதுக்கு கிடைத்த தீர்வு கைதவறிப் போனதற்கும் , நெலுந்தெனிய பள்ளி பிரச்சினைக்கு விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள நேர்ந்ததற்கும் அளவு கடந்த முக நூல் அளப்பறைகளும் முக்கிய காரணம் என்பதை மறவாதிருப்போமாக.

பைஸர் முஸ்தபாவின் முயற்சி வெற்றி பெற, நாளை சுபஹுத் தொழுகையில் துஆ செய்யுங்கள். முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில், எவர் குற்றினாலும் அரிசியாக வேண்டும் என்கிற ஒற்றுமையே இன்று அவசியம்.

Rauf Hazeer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here