மன பதற்றம் – சாதாரணமாக நினைக்காதீங்க

0
43

ஒருவருக்கு விருப்பமில்லாத, ஒவ்வாத, பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு செயலுக்கு உடல் மற்றும் மூளையின் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினைபாடுதான் மனப்பதற்றம். வயது மற்றும் சூழ்நிலை சார்ந்து உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே இது போன்ற ”ஆன்சைட்டி” (anxiety) எனப்படும் மனப்பதற்றம் உருவாக காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகம் காணப்படும் இவ்வுணர்வு தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் எனில் அதுவே மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

மன பதற்றம் ஏற்பட்டு அதுவே மன உளைச்சலுக்குத் தள்ளிவிடும். இறுதியில் மன அழுத்தம் உருவாகி ஒரு மனிதனின் உயிரையே பறித்துவிடும். இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு மனப் பதற்றம் இருப்பதாகவும் அதில் வெகு சிலரே அதை கண்டுணர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. உலக அளவில் மட்டும் மூன்று மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் இந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

மனப்பதற்றம் எதனால் வருகிறது?

வாழும் சூழல், வேலையில் அதிக அழுத்தம், அதீத பயம், மன அமைதியற்ற எண்ணங்கள் மற்றும் உடல்நிலை கோளாறுகளான தைராய்டு, நீரிழிவு நோய் மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும் மனப்பதற்றம் அதிகம் வருகிறது. பலநேரங்களில் நாம் உண்ணும் உணவில் உள்ள சில ரசாயனங்களும் இதற்கு காரணியாக அமைந்து விடுகிறதாம். அதிகம் உட்கொள்ளப்படும் போதை வஸ்துக்களாலும் இந்நோய்க்கு பலர் ஆளாகின்றனர்.

மனப்பதற்றத்தின் அறிகுறிகள்

ஒவ்வொருவரின் வாழும் சூழலுக்கு ஏற்ப மனப்பதற்றம் வேறுபடும். உதாரணத்திற்கு ஒரு நேர்காணலுக்கு செல்லும் நபர், பொதுத் தேர்வு எழுதும் ஒரு மாணவன், காதலை சொல்ல போகும் ஒரு இளைஞன் என்று வெவ்வேறு சூழ்நிலையாக இருந்தாலும் அவர்களுக்கு ஆழ்மனதில் பயம் என்ற ஒன்று ஆழமாக இருக்கும். இத்தகைய தருணங்களில் அதை இயல்பாக கையாள தெரிந்த நபர்கள் இந்த சூழ்நிலைக்கு வேறுவிதமாகவும், பதற்றத்தில் உள்ள நபர்கள் வேறுவிதமாகவும் நடந்துகொள்வார்கள். பொதுவாக மனப்பதற்றம் உடையவர்களுக்கு உடல் மற்றும் மனம் எதிர்வினைபுரிய துவங்கி அதிக படபடப்பு, அதிக வியர்வை சுரத்தல், இதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம் என்று வகைவகையான அறிகுறிகள் தோன்றி மறையும். இது இயல்பான ஒன்றாக இருந்தாலும் எல்லா செயலுக்கும் இதே போன்ற எதிர்வினை உருவானால் அது அதிதீவிர மன அழுத்தத்தில் கொண்டு விட்டுவிடும்.

image

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

எப்போதும் அளவுக்கு அதிகமான சோகம், கவலையுடன் எந்த வேலையிலும் ஈடுபடாமல் சோர்வுடன் இருத்தல், வெறுமை, தூக்கமின்மை, சரியாக சாப்பிட முடியாமல் தூக்கம் இல்லாமல் இருத்தல், அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பார்கள். சிலர் இந்த அறிகுறிகளை பிறரிடம் இருந்து மறைக்க சத்தமாக சிரிப்பது, ஜாலியாக பேசுவது போல் காட்டிக்கொள்வார்கள்.

தீர்வுகள் 
யோகா மற்றும் தியான பயிற்சி, சீரான உடற்பயிற்சி, உணவு முறையில் மாற்றங்கள், போதை பழக்கதை நிறுத்துதல், அதிக நேரம் மொபைல் மற்றும் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதை குறைத்தல் போன்ற செயல்களால் நிச்சயம் மனப்பதற்றத்தை பெருமளவு குறைத்து மன அமைதி கொள்ளலாம்.

image

வீட்டிற்குள்ளேயே இருக்கிறோமே என நினைத்து ஒரு அறைக்குள்ளேயே பூட்டிக்கொள்ளாமல் வீட்டில் இருப்பவர்களுடன் அமர்ந்து பேசலாம், விளையாடலாம், வேலைகளில் உதவி செய்யலாம்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி தற்கொலை உணர்வு மேலோங்கும். எனவே அவர்களுக்கு முடிந்தவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சைக் கொடுப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here