தமிழரசுக்கட்சிக்கும் விடுதலைப் போராடடத்துக்குமான முஸ்லிம்களின் பங்களிப்பை மூடிமறைக்க முற்படும் கருணா

0
34

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது

தமிழரசுக் கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராக முஸ்லிம் ஒருவருக்கு பதவி வழங்கியிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது கருணா அம்மான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியிலும், சுதந்திரக் கட்சியிலும் முஸ்லிம்கள் பங்காற்றி வருவது போன்று, தமிழரசுக் கட்சியிலும் பங்காற்றினார்கள் என்பது வரலாறு. இது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் அரசியல் பிரவேசமும் தமிழரசுக்கட்சி மூலமாகவே அமைந்தது.

“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத்தராவிட்டால் தம்பி அஸ்ரப் பெற்றுத்தருவார்” என தமிழரசுக் கட்சியின் மேடைகளில் அப்போது அஸ்ரப் முழங்கியது மிகவும் பிரபலமானது. அது மட்டுமல்லாது, தமிழரசுக் கட்சி சார்பாக பல தடவைகள் முஸ்லிம்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார்கள்.

அந்த வகையில், 1956 இல் எம்.எஸ்.காரியப்பர் தமிழரசுக்கட்சி சார்பாக கல்முனைத்தொகுதியிலும், அதே ஆண்டில் பொத்துவில் தொகுதியில் எம்.எம்.முஸ்தபாவும் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்கள் என்பது வரலாறு.

அது போல், கல்குடாத்தொகுதியிலும் முஸ்லிம்கள் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டார்கள். மேலும் செனட்டர் மர்ஹூம் மசூர் மௌலானாவும் தமிழரசுக்கட்சியூடாகவே அரசியலை முன்னெடுத்தார்.

இவ்வாறு தமிழரசுக்கட்சி மூலமாக தமிழ், முஸ்லிம் உறவுகள் பலமாக இருந்த நிலையில் தான் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற்றது. அப்போது அனைத்து தமிழ்ப்போராட்ட இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து போராடியதுடன், முஸ்லிம் மாவீரர் குடும்பமும் உள்ளது.

1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு பின்பு தான் முஸ்லிம்கள் தனித்துவ அரசியலை நோக்கிச் சென்றார்கள்.

1990 ஜூலை வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் போராளிகள் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள். அதன் பின்பு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் தான் தமிழ், முஸ்லிம் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

இவ்வாறு வரலாறுகள் இருக்கும் போது, முஸ்லிம் ஒருவருக்கு தமிழரசுக்கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்பட்டதாக புதிதாக குற்றம்சாட்டுவதன் மூலம் கருணா அம்மானுக்கு வரலாறு தெரியாதா? அல்லது வரலாற்றை மூடி மறைக்க முற்படுகின்றாரா? அல்லது தனது சுயநலனுக்காக தமிழ், முஸ்லிம் உறவை கொதி நிலையில் வைத்திருக்க முற்படுகின்றாரா? என எண்ணத் தோன்றுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here