செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது ஐபிஎல்?

0
106

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகமம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும். முதல் சுற்றுப் போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்பு கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்து பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும். ஐபிஎல் போட்டிகளை முடித்துவிட்டு இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை அமைக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here