கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் காண மோப்ப நாய்

0
114

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசை இந்த சமூகத்தில் இருந்து அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கணக்கற்ற ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

ஆனாலும் இந்த கொலைகார கொரோனா வைரஸ் தினமும் காட்டுத்தீ போல மனிதர்களை குறிவைத்து தாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்கிற வசதி உலகமெங்கும் பெரிய அளவில் இல்லை, மலிவானதாகவும் இல்லை. இதனால் நோய் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர்கள் பலருக்கு பரப்பி விடுகிற அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. அவர்களுக்கும் சில நேரங்களில் நோய் முற்றிவிடுகிற பரிதாபங்களும் நேர்கின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, அதிலும் அவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான வெளி அடையாளங்கள் தெரிவதற்கு முன்பே கண்டுபிடிப்பதற்கு, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆக, கொள்ளையர்களை, கொலைகாரர்களை, திருடர்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க பழகிய மோப்ப நாய்கள், இனி கொரோனா வைரஸ் பாதித்தவர்களையும் அடையாளம் கண்டு சொல்லும் நாட்கள் தொலைவில் இல்லை.

இதற்கான சோதனையை லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்துகின்றனர். அவர்கள் மருத்துவ மோப்ப நாய்கள் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்துகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட நோக்கம், ஒருவரின் உடலில் ஏற்படுகிற மணத்தின் அடிப்படையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா? என்பதை தீர்மானிப்பது ஆகும்.

இந்த நிபுணர்கள் ஏற்கனவே இத்தகைய நாய்களை புற்றுநோய், மலேரியா, பார்கின்சன்ஸ் டிசீஸ் என்று அழைக்கப்படுகிற நடுக்குவாத நோய் பாதித்தவர்களை அவர்கள் உடலில் உள்ள வாசனை மூலம் கண்டறிய வெற்றிகரமாக பழக்கியவர்கள் ஆவார்கள்.

இதுபற்றி இங்கிலாந்து புதுமையான கண்டுபிடிப்புகள் துறை மந்திரி லார்டு பெத்தேல் கூறும்போது, “இத்தகைய நாய்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புற்றுநோய்களை கண்டறிந்துள்ளன. மேலும், இந்த கண்டுபிடிப்பு எங்கள் பரந்த பரிசோதனை முறையில் வரைவான முடிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மாலைமலர் செய்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here