கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது

0
29

கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸப் மூலம் வதந்தி பரப்பியதாக ‘ஹீலர் பாஸ்கர்’ என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். நிஷ்டை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர், மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்துவந்தார்.

யூ டியூபிலும் இது தொடர்பாக அவர் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக செய்தி ஒன்றை சமூக வலைதளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர் வெளியிட்டார்.

அதில், கொரோனா என்பது உண்மையில் இலுமினாட்டிகளின் சதித் திட்டம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதை யாரும் கேட்கக்கூடாது என்றும் அதில் கூறியிருந்தார்.

“மக்கள் தொகையைப் பாதியாகக் குறைக்கும் திட்டம் ஆரம்பித்து சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும் நான் சொல்வதை யாரும் நம்பவில்லையென்றால் யாரும் உயிரோடு இருக்க முடியாது. இலுமினாட்டி என்றால் அதைப் பொய் என்கிறார்கள். இப்போது சீனாவில், இத்தாலி, ஜெர்மனியில் நடப்பதை டீவியில் காட்டுகிறார்கள். அதைப்போலத்தான் தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், மால்கள் 15 நாட்களுக்கு விடுமுறை என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் நம்மை சாகடிக்க. இப்படித்தான் சீனாவில், இத்தாலியில் ஆரம்பித்தார்கள்.

அரசாங்கம் என்றால் யார்? இலுமினாட்டிகள். இந்த இலுமினாட்டிகள் நம்ம அமைச்சர்களுக்கு இதைச் செய் என்று தகவல்கள் கொடுக்கிறார்கள்.

டிவியை உடைத்துவிட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், டிவியில் மக்கள் இறப்பதைச் சொல்லிக்கிட்டே இருப்பார்கள். முதலில் இந்த செய்தியைப் பார்த்து பயந்து சாகிறவர்கள் 100ல் 30 பேர் இருப்பார்கள். இவர்கள் முதலில் சாவார்கள். இதில் நம்பிக்கை இழந்து இன்னும் 30 பேர் சாவார்கள். மீதம் நம்மைப் போல 30 சதவீதம் பேர் உறுதியாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை என்ற ஒன்று இருக்கிறது. உருப்படாத அறிவுகெட்ட துறை. அந்தத் துறை அதிகாரிகள் வீடுவீடாக வந்து சோதித்து, நமக்கு கொரோனா இருக்கிறதோ இல்லையோ, இருப்பதாகச் சொல்லி கூட்டிக்கொண்டு போவார்கள். மனைவியை அழைத்துச் செல்வதை கணவன் தடுத்தாலும் விட மாட்டாரகள். அவர்களை தனிமைப் படுத்துவார்கள்.

அதாவது பிரச்சனையை இல்லாதவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், ஊசிபோட்டு சாகடிக்கப் போகிறார்கள். இந்த விநாடியிலிருந்து காவல்துறை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்யக்கூடாது. இல்லாட்டி ஒன்னும் செய்ய முடியாது.

சாலையில் நடந்து செல்லும்போது அழைத்து சோதித்து, உங்களுக்கு கொரனோ இருக்குன்னு சொன்னா என்ன செய்வீங்க? ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அப்புறம் சாவடிச்சிருவானுக. நினைச்சா சாகடிப்பான். இல்லாட்டி உயிரோடு விடுவான். நாளைக்கு கேட்டா கொரோனால செத்துட்டான்றுவாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு வாட்ஸப் இருக்காது. டெலிகிராம் இருக்காது. எல்லோரையும் தனிமைப்படுத்திவிடுவார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகளும் அலோபதி வைத்தியர்களும்தான் காரணம். தப்புனு தெரிஞ்சும் வேறு வழியில்லாமல் செய்கிறார்கள். நாலு நாள் யோசிச்சு என்ன செய்யனும்னு யூ டியூபில போடுறேன். நான் சொல்றதை செஞ்சா மட்டும்தான் பிழைக்க முடியும்” என அந்த செய்தியில் ஹீலர் பாஸ்கர் கூறியிருந்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர், பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் ஆகியோரின் கவனத்திற்கு இந்தச் செய்திகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் ரமேஷ் குமார் கோயம்புத்தூர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், ஹீலர் பாஸ்கர் குனியாமுத்தூரில் இன்று கைதுசெய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட பிறகு, கோவை ஏழாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மணிகண்ட ராஜா முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 3ஆம் தேதிவரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அவர் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 153 A, 504, 505(i) பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் தேதியன்று ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி’ எனும் பெயரில் வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஹீலர் பாஸ்கர். இதையடுத்து காவல்துறை அவரைக் கைதுசெய்து, நிகழ்ச்சியை நிறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here