கலாநிதி சுக்ரியின் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் பிரமுகர்களின் அனுதாபங்கள் ( தொகுப்பு)

0
51

‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கலாநிதி சுக்ரியின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும். அதுவும் தற்போது சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகும்.

மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.

தீஞ்சுவை சொட்டும் நல்ல பேச்சாளரான இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். மொத்தத்தில் இவர் ஒரு அறிவுக்கடல் என்று கூறுவது மிகையாகாது. சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி, பிறநாட்டு சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமின்றி, பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை தந்த பெருமகன் இவர்.

கலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது, அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் செயலாற்றியதேயாகும்.

அன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான பேருவளை ஜாமிஆ நளீமியாவில் பணிப்பாளராக, இறுதி வரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர். அவரது மாணாக்கர்கள் இன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வகிக்கின்றனர்.

ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தலைவரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். அத்துடன் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த நளீம் ஹாஜியாருடன் இணைந்து அரும்பாடுபட்டவர். அதுமாத்திரமின்றி, இலங்கை முழுவதிலுமுள்ள வறிய மாணவர்களின் கல்விக்காக, நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில், நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தியவர்களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார்.

இந்த உதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து வெளியேறி, தென்னிலங்கையில் வாழ்ந்த அகதி முஸ்லிம்கள் பெரும் நன்மை அடைந்தமையை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கின்றேன்.
அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.”

கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை சார்பாக பதில் தேசிய தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
(எம்.ஐ.எம்.றியாஸ்)

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி வாழ்ந்து மறைகின்றார்கள் அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களது மறைவோடு நினைவுகளும் மறக்கப்படுகின்றன.ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்கு காலம் சிலர் தோன்றுகின்றார்கள் அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணிப்புகள் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அவ்வாறான ஒருவர்தான் இவர்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கு மர்ஹும் நாளீம் ஹாஜியாருடன் இணைந்து இவர் மேற்கொண்ட பணியே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கியமையாகும்.அதன் நிருவாகத் தலைவராக இருந்து இவர் செய்த பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாகத் தோன்றிய இக்ரஃ தொழிநுட்பக் கல்லுாரியின் உருவாகத்திலும் இவர் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை ஜாமியஆ நழீமியா கலாபீடத்தின் உருவாக்கத்திற்காக பெருவள்ளல் மர்ஹும் நழீம் ஹாஜியாருடன் அயராது உழைத்து கடந்த சுமார் 50 வருடங்களாக அதன் பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் இஸ்லாமிய தஃவாப் பணிகள் உட்பட சமூதாயத்திற்கான அவரின் பூர்வீக வரலாற்று ஆய்வுப்பணிகள் போன்ற நற்காரியங்களில் முன்னின்று உழைத்தவராவார்.

முஸ்லிம் சமூகத்தின் எ’ழுச்சிக்கு பெரிதும் பங்காற்றிய இவர் பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி ஒர் உன்னதமான மனிதராவார்.உஸ்தாத் அக்கார் முஹம்மத் எழுதிய கலாநிதி சுக்ரி ஒரு பன்முக ஆளுமை எனும் தலைப்பிலான கட்டுரையில் இவர் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பு ஸாஹிறா கல்லுாரியின் அதிபராக பதவியைப் பொறுப்பேற்க கலாநிதி சுக்ரியை ஜாமிஆவில் இருந்து விடுவிக்குமாறு மர்ஹும் நளீம் ஹாஜியாரிடம் வேண்டப்பட்ட போது பதில் இவ்வாறு கூறப்பட்டது.கலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும் அவருடைய பாத்திரத்திற்கு தங்கத்தை மறுதட்டிலும் வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் கேட்கப்பட்டால் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன் என பதில் கூறப்பட்டது.

ஆரம்ப காலத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் இவருக்கு Y Personality விருது மர்ஹும் கலாநிதி சுக்ரி அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மர்ஹும் கலாநிதி சுக்ரி அவர்கள் பல பொது மேடைகளில் பேசும் போது எனக்கு பொதுமேடையில் பேசுவதற்கு முதலாவது வழி அமைத்து தந்தது தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. என அவர் பல மேடைகளில் கூறியதை என்றும் நாம் எழிதில் மறந்து விட முடியாது.

பல்துறை ஆளுமையுடன் பல ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கியவருமான கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம்.சுக்ரி தனது 80ஆவது வயத்தில் இன்று மரணித்தார்.அவரின் நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக என அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் – முன்னாள் முதலமைச்சர் நஷீர் அஹமட்
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக்காலம் சிலர் தோன்றுகின்றார்கள். அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணம் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பனித்தவர்கள் அவ்வாறான ஒருவர்தான் கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்.

அறிவுத் தந்தை நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீமியாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப் படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள்.

அவர்களது ஆற்றொழுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாக புரியமுடியும்.1978 அக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள்.
கடந்த 2001 ம் ஆண்டு எனது தலைமையின் கீழ் முஸ்லிம் சமூக ஆய்வு மன்றம் எனும் அமைப்பை இஸ்தாபித்த போது அதற்கு தேவையான முஸ்லிம் சமூகம் பற்றிய தேவையான ஆவனங்கள் மற்றும் தரவுகள் போன்றவற்றை எமக்கு வழங்கி முழுஆதரவையும் வாழ்த்துக்களையும் முதன்முதலில் தெரிவித்ததை இத்தருணத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வாறு பல்துறை ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கி முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு பெரிதும் பங்காற்றிய கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி தனது 80 வது வயதில் 2020 மே 19 இல் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று மறுமை வாழ்விற்காக மீண்டும் அவனிடமே சென்று விட்டதை அறிந்து பெரும் மனவேதனை அடைந்துள்ளேன்.
இறைவன் அவரது சமூக பணிகளையும், நல் அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக! ஆமின்
அல் ஹாபில் நஷீர் அஹமட்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கலாநிதி ஷுக்ரி அவர்களின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு பெரிய இழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் !
அபு ஹின்ஸா

மறைந்த முன்னாள் நளீம் ஹாஜியுடன் இணைந்து ஜாமியா நளீமியா அரபு கலாசாலையை உருவாக்கி அக்கலாசாலையின் பணிப்பாளராக இருந்த கலாநிதி ஷுக்ரி அவர்கள் காலமானார் (இன்னாஹ்லில்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்) எனும் செய்தி என்னை வந்தடைந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.
இலங்கையில் தற்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் முக்கிய ஒருவரான இவர், இலங்கை முஸ்லிம்களுக்கு அதிக உலமாக்களை உருவாக்கி மார்க்க ரீதியாகவும் சமூக விடயங்களிலும் அளப்பெரும் தொண்டாற்றியதோடு அதிகமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்கி முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஆளுமையாவார் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தனது இரங்கல் அறிக்கையில் புனிதமிகு ரமழானின் இறுதிப்பத்தில் நிகழ்ந்த இந்த அறிஞரின் இழப்பு முழு முஸ்லிம்களுக்கும் பாரிய துயரை ஏற்படுத்தியுள்ளதோடு ஈடு செய்யமுடியாத இடைவெளியையும் ஏற்படுத்தியிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை வல்ல இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரது சமூக பணிகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை எல்லாம் வல்ல நாயன் வழங்கிட வேண்டும் எனவும் இரு கையேந்தி பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்காகவே வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்த ஒரு மிக்பெரிய மனிதரை நாம் இழந்து விட்டோம்.என. கிழக்கு மாகாண. முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

ஏ.பி.எம்.அஸ்ஹர் அவர் விடுத்துள்ள. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கலாநிதி சுக்ரி அவர்கள் ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபகராகவும், இறுதி மூச்சுவரை அக்கலாபீடத்தினுடைய அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர்.
காலம் சென்ற மதிப்பிற்குரிய மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து அவர்களது பொருளாதாரத்தில் இருந்து மிகச்சிறந்த கல்வி சமூகத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும் என்று இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி நாடு முழுவதிலும் சென்று முஸ்லீம்கள் மத்தியிலே கல்வியிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்ட ஒருவர்.
ஜாமிஆ நளீமியாவை உருவாக்குவதிலே முழுமையாக நளீம் ஹாஜியார் அவர்களுடன் நின்று அதனை உருவாக்கி மிகச் சிறந்த கலாபீடமாக கல்வியிலும், சமூக ரீதியிலும் அந்தஸ்த்துள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதிலே இரவு பகலாக பாடுபட்ட ஒரு சகோதரர்.

இலங்கை முஸ்லீம்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதிய ஒரு மிகப்பெரிய ஒரு மனிதர்.

இச்சமூகத்திற்காகவே வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்த ஒரு மிக்பெரிய மனிதரை நாம் இழந்து இருக்கின்றோம். இப் புனிதமான றமழான் மாதத்திலே அவரை நாம் இழந்து இருக்கின்றோம். அழ்ழாஹ்விடத்தில் அவருக்காக நாம் பிரார்த்திப்போமாக. அழ்ழாஹுத்தாலா அவர்களது நல்லமல்களை அங்கீகரிக்க வேண்டும்.

அவர்களது கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அவர்களது குடும்பத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவர்களுக்குப் பின்னரும் அவர்களது பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றி தொடரவேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திராக தூரநோக்குடன் செயற்பட்ட கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.

கல்முனை மாநகர முதல்வர் றகீப் அனுதாபம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலப்பகுதியில் தமது சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் செயலாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கலாநிதி சுக்ரி அவர்கள் 04 தசாப்தங்களுக்கு முன்னர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து ஜாமிஆ நளீமியா கலாபீடத்தை ஸ்தாபித்து, தனது இறுதி மூச்சு வரை அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வழி நடத்தி, சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக கட்டியெழுப்பியுள்ளார்.

ஒரு பல்கலைக்கழத்திற்கு ஒப்பான தரத்தில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஜாமியா நளீமியா கலாபீடமானது நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களையும் கல்வியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. இன்று அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முக்கியத்துவமிக்க பதவிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றி வருகின்றனர்.

இத்தகைய கலாபீடம் ஒன்றை உருவாக்கி, உயரிய பணியை சமூகத்திற்காக நிறைவேற்றிய இந்த உத்தமர்
இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார். அதற்காக பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் முஸ்லிம்களின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சமூக சீர்திருத்தம் தொடர்பிலும் இவர் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.
சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியான கல்வியியலாராக, தூரநோக்கு சிந்தனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கின்ற கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது நற்பணிகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கம் வழங்க பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவானது இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் அனுதாபம்.


( அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை இஸ்லாமிய கல்விப்புலத்தில் பெரும் ஆளுமையாக மாத்திரமன்றி ஒரு அறிஞர்களும் திகழ்ந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் கொண்டேன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மிகவும் இக்காட்டானதொரு காலப்பகுதியில் எம்மைப் பிரிந்த கலாநிதி அவர்களின் இழப்பு முஸ்லிம்களின் புத்திஜீவித்துவப்புலத்தில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரிய பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைகழகத்தில் கலாநிதியாகிய அன்னார் சர்வதேச மட்டத்தில் புகழ் பூத்த ஒருவராக இருந்த போதிலும் தாய்நாடாம் இலங்கைத் திருநாட்டுக்கே அவரது சேவைகளை செய்த தியாகப் பெருந்தகையாக மிளிர்ந்தார்.

கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் ஆற்றல் மிக்க உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்து வன்மையும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களிடத்தில் அழியாத்தடம் பதித்துள்ளது. 1978 ஒக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கங்கள் அவர்களது சிந்தனை வீச்சிக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

ஜாமியா நளீமிய்யா கலாகூடத்தின் ஆயுட்கால பணிப்பாளராக தமது பணிகளை திறமையாக செய்ததுடன் பல்லாயிரம் மாணவர்களின் நல் ஆசிரியராக திகழ்ந்தார்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உறவினர்கள்,ஆலிம்கள் கல்விப்புலம் சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கவும் மனமுருகி பிரார்த்திக்கிறேன்.

நமது சமூகம் ஒரு பன்முக ஆளுமையை இழந்து நிற்கிறது : தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா இரங்கல் ! நூருல் ஹுதா உமர் நாடறிந்த முஸ்லிம் கல்விமானான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் இழப்பு நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.அன்னாரின் இழப்புக் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.

முஸ்லிம் இளைஞர்களின் கல்வி அறிவு, தொழில் வாய்ப்புக்களை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அரபுக் கல்லூரி,இக்ரஹ் தொழினுட்பக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து கலாநிதி சுக்ரி அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் எமது சமூகத்தில் விலைமதிக்க முடியாதவை.

இறுதி வரைக்கும் ஜாமிய்யா நளீமிய்யாவின் பணிப்பாளராக இருந்து அவராற்றிய சேவைகளால் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் கல்விக் கண்கள் திறக்க வைக்கப்பட்டுள்ளன.இறக்கும் வரையிலும் அந்நார் அறிவுப்பணி, கல்விப் பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
விஷேடமாக ரமளானில் அதிலும் சிறப்பாக நரக விடுதலையளிக்கப்படும் கடைசிப்பத்தில் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டமை எமக்குப் படிப்பினையாகவே உள்ளது.ஆயிரம் மாதங்களையும் விடச் சிறந்த இரவாகக் கருதப்படும் புனித “லைலத்துல் கத்ரை” எதிர்பார்க்கும் ஒற்றைப்பட்ட நாளில் அவருடைய ஆத்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளது.சமூகத்துக்காகப் பொருந்திக் கொண்டோரை அல்லாஹ், இவ்வாறே கண்ணியப் படுத்துகிறான்.கலாநிதி சுக்ரியின் கல்விப் புலமை, மார்க்க விடயங்களிலும்,நவீன பித்னாக்களுக்கும் அவர் வழங்கிய வியாக்கியானங்கள் இலங்கையில் மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பேசப்படுகிறது.

மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற அவரது சகோதர மொழியிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள்,ஏனைய சமூகத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள உதவியது.

முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகள் சில,இந்த கொரோனாச் சூழ் நிலையை வைத்து எமது மத நம்பிக்கைகள், இறுதிக் கிரியைகளைக் கொச்சைப் படுத்தும் இன்றைய சோகமிக்க சூழ்நிலையில், கலாநிதி சுக்ரி போன்றோரின் நவீன வியாக்கியானங்கள் அவசியம் தேவைப்படுகிறது.

இத்தேவைகளுக்கு உதவாது அறிவியலில் அவர் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டார்.சுக்ரி போன்றோரின் மார்க்கப் புலமை, விசாலமான பார்வை,ஆழ்ந்த அறிவுகளாலே இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க முடியுமென்றும் தனது அனுதாபச் செய்தியில் தேசிய காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி ஷுக்ரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: மயோன் முஸ்தபா அனுதாபம்!
முஸ்லீம் கல்வி எழுச்சியில் மிகப்பெரும் பங்காற்றி வருகிற ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபக பணிப்பாளரான கலாநிதி ஷுக்ரி அவர்களின் மறைவை அறிந்து கவலை அடைகிறேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கலாநிதி ஷுக்ரி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய இவர் இக்ரா தொழிநுட்ப கல்லூரியை ஸ்தாபித்து இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டியாக பெரும் பங்காற்றினார்.

மார்க்க கல்வியூடாக இலங்கையில் ஒரு பண்பட்ட முஸ்லீம் சமூகத்தினை கட்டியெழுப்ப இவர் ஆற்றிய தொண்டு யாராலும் மறக்க முடியாத மிகப்பெரும் சேவையாகும். பல்லின சமூகத்தின் மத்தியில் முஸ்லீம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டலை மிகவும் துல்லியமாக வழங்கியவர் கலாநிதி ஷுக்ரி அவர்கள். அன்னாரின் கல்விச் சேவையினை வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அவரது மறுமை வாழ்வு சிறக்க இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மரண செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த கால்விமான்களில் ஒருவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சக்ரி அவர்கள் இன்று (19.05.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.

தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காக செலவழித்த இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு நல்லுறவோடு இருந்து வந்தார்கள். தேவையான போது நல்லாலோசனைகளையும் தருவதில் பின் நிற்கவில்லை. உலமா சபை நடாத்திய பல மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.

பன்னூல் ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்த இவர்கள் நடுநிலையான போக்கோடும், உலமாக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்போடும் இருந்து வந்தார்கள்.

ஜாமிஆ நளீமிய்யாவுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here