ஏறாவூர்ப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்புக்குழுவின் தீர்மானம்

0
56

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்புத்திட்டத்தின்கீழ் அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் முழுமையாக மூடிவிட்டு பொதுமக்களுக்குத் தேவையான சகல பொருட்களையும் வீடுகளுக்குச் சென்று வழங்கும் இறுக்கமான நடைமுறையினைப் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொருட்கொள்வனவிற்காக இப்புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்புக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்குழுவில் ஏறாவூர்ப் பிரதேச செயலகம், நகர சபை, சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம், பொலிஸ், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை ஆகிய உள்ளுர் அரசாங்க திணைக்கள தலைவர்களுடன் பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யது உலமா சபை, வைத்திய அத்தியசகர் மற்றும் கூட்டுறவுச் சங்கத்தலைவர் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்புக் குழுவின் தீர்மானத்திற்கிணங்க ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் நடமாடும் வியாபாரம், கார்கில்ஸ் பூட் சிற்றி, சதொச. தனியார் மருந்து விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வியாபார நடவடிக்கைகளுக்காக சுகாதார வைத்தியதிகாரியின் சிபாரிசுக்கமைவாக பிரதேச செயலாளரின் அனுமதியுடன் உள்ளுராட்சி மன்றம் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

பொதுமக்களின் ஏனைய அத்தியாவசிய செயற்பாடுகளுக்காக பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது. பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்க விரும்புகின்ற வர்த்தகர்கள் வட்ஸ்எப் மூலமாக நகர சபையில் பதிவு செய்யவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நாட்களில் காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை பொருள் விநியோகம் செய்யமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் பலசரக்குக்கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள், தொலைபேசி மீள்நிரப்பு மையங்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடக்கூடிய எந்தவொரு வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென கண்டிப்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான வீதி , சனநெரிசல் மிக்க புன்னக்குடாவீதி மற்றும் காதியார் வீதி ஆகிய பாதைகளில் அரசாங்க வாகனங்கள், பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் தூரப்பயணிக்கும் வாகனங்கள் தவிர்ந்த எந்தவொரு வாகனமும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுப்பொதிகள் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் உலருணவுப் பொருட்களை மாத்திரம் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தினூடாக வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here