ஊவா ரீ20 கிரிக்கெட் என்ற போலிப் பெயரில் இந்தியாவில் நடந்த சூதாட்டக் கிரிக்கெட் – சந்தேக நபர்களைத் தேடி இந்திய பொலிஸார் வலைவிரிப்பு

0
62

இலங்கையில் விளையாடப்படும் இருபது 20 கிரிக்கெட் போட்டி என்று போலியாகக் கூறி இந்திய கிராமம் ஒன்றில் பெருந்தொகை பந்தயம் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என தங்களை சித்தரித்துக்கொண்ட உள்ளூர் வீரர்கள் இரண்டு அணிகளில் கடந்த திங்களன்று விளையாடிய கிரிக்கெட் போட்டி நேரடி வர்ணனையுடன் யூ ரியூபில் ஒளிபரப்பப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்திய விளையாட்டுத்துறை இணைத்தளங்களில் பந்துக்கு பந்து விபரமும் பதிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போட்டி இலங்கையில் நடைபெறுவதாக நம்பச் செய்யும் வகையில் ஏற்பாட்டாளர்கள் மைதானத்தில் இலங்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியதுடன் வெளியிலிருந்து யாரும் பார்க்க முடியாதவாறு மைதானத்தைச் சுற்றி கூடாரங்களும் அமைத்திருந்தனர்.

ஒரு நெடுஞ்சாலையை அண்மித்த ஒரு பின்தங்கிய கிராமத்தில் இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வட இந்தியாவின் சவாரா கிராமத்தில் பந்தயம் பிடிப்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து பொலிஸார் குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்தனர்.

மோசடி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் இருவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் பொதுவாக மோசடி மற்றும் சூதாட்டம் என்பன சட்டவிரோதமாகும்.

இப் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் யார் பங்குபற்றிய வீரர்கள் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

‘ஒன்லைனில் பந்தயம் பிடிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் இலங்கை அணிகள் விளையாடுவதாக அவர்கள் பாசாங்கு செய்துள்ளனர்’ என மொஹாலி பொலிஸ் உயர்அதிகாரி குல்தீப் சிங் சஹால், ஏ.எவ்,பிக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தென்பகுதி நகரான பதுளையில் உள்ள விளையாட்டரங்;கு ஒன்றில் ‘ஊவா ரீ20 லீக்’ என்ற போட்டியை ஊவா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக இந்தியாவில் உள்ள பிரபல விளையாட்டுத்துறை இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

முன்னாள் இலங்கை தேசிய வீரர்கள் இதில் பங்குபற்றுவார்கள் எனவும் நான்கு அணிகள் 14 போட்டிகளில் ஜூன் 29ஆம் திகதிமுதல் ஜூலை 5ஆம் திகதிவரை விளையாடும் எனவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் ஊவா ரீ20 என்று ஒன்று இடம்பெறவே இல்லை. அத்துடன் இத்தகைய போட்டி இலங்கையில் நடத்தப்படவில்லை எனவும் அப் பெயரில் போட்டி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.

இந்த சுற்றுப்போட்டி ‘போலியானது’ என இந்தப் போட்டியில் விளையாடும் வீரர்களில் ஒருவர் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் தேசிய வீரர் பெர்வீஸ் மஹ்ரூவ், டுவீட் செய்திருந்தார்.

சில தினங்களுக்கு உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை நடத்துவதாகவும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பார்வையாளர்களின்றி விளையாடுவதாகவும் ஏற்பாட்டாளர்ள் தங்களிடம் தெரிவித்ததாக இந்தியாவில் குறிப்பிட்ட இந்த மைதானத்தின் உரிமையாளர்களான ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்டது.

‘இப் போட்டியை யார் ஏற்பாடு செய்தது என்பது எங்களுக்கு தெரியாது. எங்களுக்குக்கூட உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. மைதானத்தைச் சுற்றி கூடாரங்கள் அமைத்து முழு மைதானத்தையும் மறைத்து வி;ட்டார்கள்’ என அந்த கிரிக்கெட்; சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியை ஆன்லைனில் எத்தனை பேர் பார்த்தார்கள்? எவ்வளவு பணம் போட்டிகளுக்கு செலுத்தப்பட்டது என்பது தெரியவரவில்லை.
இதேவேளை, வெல்லவாயா வைப்பர்ஸ், மொணராகலை ஹோர்னட்ஸ், பதுளை சீ ஈக்ள்ஸ், மஹியங்கனை யூனி லயன்ஸ் என பெயரிடப்பட்ட அவ்வணிகளின் தலைவர்களாக முறையே அஜன்த மெண்டிஸ், திலக்கரட்ன டில்ஷான், பெர்வீஸ் மஹ்ரூவ், திலான் துஷார ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். ஆனால், இந்த நான்கு வீரர்களும இதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here