இராஜதந்திரங்களின் தோல்வி ??

0
77

உலகையே ஆட்டம் காணச் செய்துள்ள கொரோனா
வைரஸின் தாக்கத்தை உலக மக்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி வழங்கிக் கொண்டிருந்த பொருளாதாரத்தில் வலிமை பெற்ற நாடானா அமெரிக்காவே இழந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவதற்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதானது கொரோனா வைரஸின் தாக்க வலிமை எத்தகையது என்பதை உணர்த்தியிருக்கிறது.

உலகளவில் 25 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரொனா தொற்றின் காரணாக தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக இந்தியாவின் கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தது.
அமெரிக்காவில் வாரமொன்றுக்கு 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்பை இழந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. தொழில் இழப்பினால் மாத்திரமின்றி பல்வேறு நெருக்கடிகளை உலக மக்கள் எதிர்கொண்டிருக்கையில் இலங்கை மக்களும் கொவிட் 19 வைரஸின் தாக்கத்தினால் பல்வேறு துறைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல்லின கலை, காலசார பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழும் இலங்கையில் கொரோனா பரவலின் தாக்கம் அனைத்து இன மக்களையும் பாதித்திருக்கிறது. இந்தப் பாதிப்புக்களிலிருந்து மீள வேண்டும் என்றும் அதற்;காக ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதும் ஒவ்வொரு பிரஜைகளினதும் வேண்டுதலாகவும் முயற்சியாகவும் உள்ள நிலையில், கடந்த 11ஆம் திகதி முதல் 23 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அன்றாட நடவடிக்கைகளில் பல தர தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயற்படும் விதம் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்பியிருந்தாலும், கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கூட எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக் கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர் என தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஏறக்குறைய இரு மாதங்கள் இந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸின் பீதி மற்றும் அழுத்தத்துடன் வாழ்ந்த நாட்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். இதன் தாக்கத்திலிருந்து மீள எழுவதற்கு அதிக காலம் எடுக்கும் என்பதை மறுக்க முடியாத நிலையில்;, இலங்கையின் தேசிய இனமாகவுள்ள முஸ்லிம்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும், மத உரிமையை பெற்றுக் கொள்வதற்கும் போராட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிர்பந்தத்தை கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் உலக ஒழுங்கிற்கு மாறாக தகனம் செய்யப்பட்டமை புடம்போற்றியிருக்கிறது.
முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கிடையிலான ஒற்றுமையின்மையும், சுயநலப் போக்குகளும், காட்டிக்கொடுப்புக்களும், சமூகத்திற்கான ஆளுமையுள்ள தலைமைத்துவ வெற்றிடமுமே காலத்திற்குக் காலம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள முடியாத நிலைமைகளை உருவாக்குவதாகவும் இந்த நிலைமை எதிர்காலத்தில் எத்தகையை சூழலை உருவாக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

முஸ்லிம்களும் எதிர்காலமும் வரலாற்று நெடுங்கிலும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும்; நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வருக்கின்றன. இந்நெருக்கடிகள் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தி சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, சமய, கலாசாரம் உட்பட அனைத்து விடயங்களையும் ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றிணைத்து அவற்றில் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தும்; அத்தேவையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் இதுவரை காலமும் முடியவில்லை. அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவும் ஊக்கப்படுத்தவும் சிவில் சமூகங்களினாலும் ஆன்மீக வழிகாட்டிளினாலும் முடியாதுள்ளது. தனிப்பட்ட மற்றும் கொந்தராத்து நிகழ்ச்சி நிரல்கள் அவற்றை தடுத்து வருகிறது என்பதை அனுபவங்களிலிருந்து நோக்க முடிகிறது.

2000ஆம் ஆண்டின்; பின்னர் முஸ்லிம் மக்களின் வாக்குச் சக்தியை முஸ்லி;ம் அரசியல் தரப்பினர் முறையாகப் பயன்படுத்தவில்லை, வாக்களித்த மக்கள் எதிர்பார்த்த நலன்களை, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மக்கள் பிரதிநிதிகளினால் அடைய முடியவில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
சமூக அரசியல் சக்தி பல வீனமடையும் போது, அரசியல் சக்திகளை ஒன்றிணைக்க முடியாத நிலை காணப்படும்போது அவ்வியலாமை மென்மேலும் சமூகத்தை நோக்கி அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், உரிமை மீறல்களையும் ஏற்படுத்துத்தும். அத்துடன் சமூகக் கூறுகளையும் பலவீனப்படுத்தும் என்ற உண்மையை இக்கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்ற மத நிந்தனைகள்.
வெறுப்புப் பேச்சுகள், அவற்றோடு இணைந்த அரசியல், ஊடகச் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.

இக்கறும்புள்ளி செயற்பாடுகள் வரலாற்றுச் சான்றாக மாத்திரமின்றி எதிர்கால முஸ்லிம்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கான முன்மொழிவாகவும் உள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஜனநாயகத் தேசமொன்றில் வாழும் ஒரு தனித்துவ இனமென்ற ரீதியில் முஸ்லிம்கள் குறித்த ஏனைய சமூகத்திலுள்ள தவறான சமூகப்பார்வை கழையப்படுதற்கும், தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதற்கும், வாழ்வுரிமைக்கு எதிரான சவால்கள் வருகின்றபோது அவற்றை ஒன்றிணைந்து முறியடிப்பதற்கும் ஆளுமையுள்ள மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கும், ஏனைய மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்ய வேண்டியது வாக்காளர்களான மக்களின் தார்மீகப் பொறுப்பாகவும்.

மக்கள் தங்களது பொறுப்பை அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இதர நலன்களுக்காகவும் பன்படுத்துகின்றபோது, மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மக்களின் நலன்களை முன்நிலைப்படுத்தாது தங்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவார்கள் என்பது இந்த வைரஸ் தொற்றுக்காலத்தில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளைக் கொண்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்.

என்பது வெளிப்படை முஸ்லிம்களின் அரசில்பலத்தை நிறுவிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களை தெரிவு செய்வதற்கும் , ஓட்டுமொத்த வாக்குப்பலம் இன்றியமையாததாகும். அதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் வழங்குகின்றன.

இருப்பினும இத்தகையை சந்தர்ப்பத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சமூக அரசியல் கட்சித் தலைமைகள் கைநலுவ விட்டு விடுவார்கள் என்பதை கட்டியம் கூற முடியும். ஏனெனில முஸ்லிம் அரசியல் பரப்பில் முஸ்லிம் சமூகம் சார் அரசியல் கட்சிகளின்; நகர்வுகள் அவற்றைப் புடம்போட்டிருக்கிறது என்பது உண்மை.
2019 ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற நாட்கள் முதல் இந்தக் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் காலம் வரை முஸ்லிம்களுக்கு சோதனைக்களமாகவே காணப்படுகிறது. வெறுப்புப்பேச்சுகள், செயற்பாடுகள், மதத்திற்கு எதிரான நிந்தனைகள், உரிமை மீறல்கள் என்பன தொடராக இடம்பெறுவதையும் காண முடிகிறது.

மதவாத நிந்தனைகளும் வெளிப்பாடுகளும்
ஏறக்குறைய பத்து தசாப்தங்கள் கடந்தும் முஸ்லிம்களை நோக்கி மதவாத சிந்தனை, நிறுத்தப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி மீதான காழ்ப்புணர்ச்சி ஓயவில்லை. இவற்றின்; எதிரொலியாகவே 2001ல் மாவனல்லையில் மேற்கொண்ட அழிவுகளையும 2014ல் அளுத்தமையில் புரிந்த கோர வன்முறையும், 2017 நவம்பர் 18ல் கிந்தோட்டையில் ஆடிய இனவெறியாட்டத்தையும் 2018 மார்ச்சில் அம்பாறை மற்றும் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளையும்; 2019 மே மாதத்தில் சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அழிப்பு வன்முறைகளையும் நோக்க வேண்டியுள்ளது.

நடந்து முடிந்த ஒவ்வொரு கலவரத்தினாலும் அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் கோடிக்கணக்கான சொத்து உடமைகளை இழந்து வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது ஏழைகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அழிப்பு வன்முறைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இழந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவில்லை என்பது அவதானத்திற்குரியது.

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களினூடாக கடும்போக்காளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற மத காலசார நிந்தனைகள்,செயற்பாடுகள் இழப்புக்களை மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரின் இருப்பையும், உரிமைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதாகவே காணப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களைப் ஒத்ததான நிலைமையை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலும் முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியிருப்பதாகவே உணரமுடிகிறது.; சில தனியார் ஊடகங்கள் முஸ்லிம்கள் தொடர்பாக வெளிப்படுத்திய செய்தித் தொகுப்புக்கள் இந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. அத்துடன், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள்; சவாலுக்குட்படுத்துவதையும் காண முடிகிறது.

1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் உலகளாவி பிரகடனமானது மக்கள் கண்ணியத்துடன் நடதப்பட வேண்டுமென்றால் அவை பொருளாதார உரிமைகள், கல்வி உட்பட சமூக உரிமைகள்,; கலாசார, அரசியல் பங்கேற்பு மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவற்றுக்கு உரிமைகள் தேவை என்று இப்பிரகடனம் அங்கீகரிப்பதுடன் இனம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது மற்றக் கருத்துக்கள் தேசிய அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எந்தவொரு வகையிலும் வித்தியாசமின்றி உரிமைகள் அனைவருக்கும் உண்டு என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டாலும்;, இந்நாட்டில் அவ்வுரிமைகளோடு சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கு பெரும்பான்மை கடும்போக்குவாதிகள்; இன, மத மேலான்மை அடிப்படை நம்பிக்கையினால் அவற்றைப் வழங்க மறுத்து வந்திருப்பது மாத்திமின்றி அவ்வுரிமைகளை பெறுவதை ஊடக அறிக்கைகள், வெறுப்புப் பேச்சுகள், மதவாத நிந்தனைகள்; மூலம் தடுக்க முயற்சிக்கப்பட்டதையும், முயற்சிக்கப்படுவதையும் காண முடிகிறது.

முஸ்லிம்களின் பொறுப்பும் நீதியின் வெற்றியும்
பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை இலகுபடுத்துவதிலிருந்து முஸ்லிம்கள் நிதானமாகவும், சாணக்கியமாகவும் செயற்படுவது காலத்தின் அவசியமாகும். குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்தொற்று பரவலடைந்த காலத்தில் முஸ்லிம்களே நோய்தொற்றுப் பரவுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்றதொரு போலியான விம்பத்தை ஏனைய மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோதப்போக்குடையவர்கள் சில ஊடகங்கள் வாயிலாகச் கூவியது போன்று நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ள இந்நேர காலத்தில் இந்நோய்த்தொற்று சமூகப்பரவலடையாது பாதுகாப்பதில் குறிப்பாக முஸ்லிம்கள் அவதானமாகச் செயற்படுவது மிக இன்றியமையாதது.

முஸ்லிம்கள் புற, அகச் சூழலையும், பலம,; பலவீனத்தையும் சுய விசாரணைக்கு உட்படுத்தாது, பொறுப்பற்று, அவதானமின்றி செயற்படுவதானது வீண்பழி சுமத்தப்படுவதற்கும், நெருக்கடிகளை அதிகரித்துக் கொள்ளவும் இனவாதம் இலகுவாகப் பாய்வதற்கும் வழி ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை மனதளவில் நிறுத்தி தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது சமூக பாதுகாப்புக்கான மூலோபாயமாக அமையும். அத்துடன். சமூக வலத்தளப் பதிவுகளில் கூடிய நிதானம் அவசியமென்பதோடு அறிவியலுடானதும், சமூக ஆரோக்கியமிக்கதானதாகவும் அவ்பதிவுகள் அமைவது அவசியமாகும்.

வரலாறு நெடுங்கிலும் கடும்போக்குவாதிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட நெருக்குவாரங்களின் பின்னணியில் முஸ்லிம்கள் பக்கமிருந்த சிறு விடயங்களே காரணமெனச் சொல்லவும் வைத்திருக்கிறது என்பது மனங்களில் பதியப்பட வேண்டியதொன்றாகும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்ற சவால்களுக்களுக்கு முகம் கொடுத்து அவற்றிலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக சமூகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் எவை வெற்றிகொள்ளப்பட்டன. எவை தோல்வி கண்டன என்ற கேள்விகளும் இக்காலத்தில் எழுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளுக்கு எதிராக பல்வேறு பொதுத் தளங்களில் அவ்வப்போது வெறுப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றது. தேசிய பரீட்சைக்குகளுக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்கு தலையை மூடியச் சென்ற முஸ்லிம் மாணவிகள் அவர்கள் அணிந்திருந்த உடைக்கு எதிராக அதிகாரிகள் நடந்து கொண்ட சம்பவங்களினால் அவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். முஸ்லிம் ஆசிரியைகளும் ஆடை விடயத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறான கலாசார ஆடைகளுக்கெதிரான நிந்தனைகள் போலவே மத விடயங்களுக்கு எதிரான நிந்தனைகளும் வெளிப்படுத்தப்பட்டன. கொழும்பு கண்டி வீதியோரத்தில் வேவல்தெனிய ரதாவடுன்னயில் அமைந்துள்ள பள்ளிவாசலுடன் இணைந்த சுவரில் உருவப்படங்கள் வரையப்பட்ட விடயம்;, நெலுந்தெனிய உடுகுமபுற நூர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் சிலை வைக்கப்பட்ட விவகாரம், அதேபோன்று மஹர சிறைச்சாலையில் அமைந்துள்ள நூறு வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலினுள்; புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் என்பவற்றை மத நிந்தனையின் வெளிப்பாடுகளாகவே நோக்கப்படுகிறது.

இந்நிந்தனைகள் இராஜதந்திர ரீதியாக வெற்றிகொள்ளப்பட்டனவா. இவ்விடயங்களை நிதானமாகவும், இராஜதந்திர ரீதீயாகவும் எதிர்நோக்குவதற்கான அரசியல் பலம் உள்ளதா என்றால் பொதுவாக இல்லையென்ற பதிலே விடையாகக் கிடைக்கும். முஸ்லிம்களின் அரசியல் பலம் பலவீனமடைந்திருக்கிறது அதன் வெளிபாடானது கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் முஸ்லிம்கள் தொடர்பான கருத்துக்கள், முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டபோது அவை குறித்த தெளிவை உரிய தருணத்தில் முன்வைக்காத நிலைமை காணப்பட்டதை சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை பிரிந்து நின்று செயற்படும் சுயநலப்போக்கு. கட்சி செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கெதிரான நெருக்கடிகள், சவால்களை இராஜதந்திர ரீதியாக வெற்றிகொள்ள முடியாமல் செய்திருக்கிறது என்ற பதிவுகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிர் இழந்த முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதைத் தடுப்பற்காக முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர நடவடிக்களும் தோல்வி கண்டுள்ளதைப் பதவிடவேண்டியுள்ளது.

ஜனாஸாக்களின் எரிப்பும் எதிரோலியும்
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவில் முஸ்லிம்களும் அடங்குவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மாத்திரமின்றி இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் வாழும் முஸ்லி;கள் கொவிட் 19 தாக்கத்தின் விளைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். உயிர் இழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின் பிரகாரம் அந்நாடுகள் பலவற்றில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வரும் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அவரவர் சார்ந்த நபர் இறப்பை அடையும்போது எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி அவ்வுடல்களுக்கான இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்படுகிறதோ அவ்வாறு முஸ்லிம் நபர் ஒருவர் உயிர் இழந்;தால் அவருக்கான இறுதிக் கடமைகளை நிறைவேற்றி அடக்கம் செய்வது முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கம் காட்டும் வழிமுறையாகும்.

ஆனால், இந்த வழிமுறையை கொரோனா வைரஸ் தோற்று சவாலுக்கு உற்படுத்தியது. இருப்பினும், கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளாகி உயிர் இழப்பரின் உடலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் எரிக்க அல்லது புதைக்க முடியும் என்ற அடிப்படையில் பல நாடுகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிர் இழந்த முஸ்லிம் நபர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்கு அந்நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோது இலங்கையில் கொரானா தொற்றினால் உயிர் இழந்த 4 முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது தகனம் செய்யப்பட்டமை தேசிய, சர்வதேச மட்டத்தில் பல்வேறு விமர்சனங்களையும், கேள்விக்கனைகளையும் உருவாக்கியிருக்கிறது.

முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணியிலேயே அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்ல என்ற கருத்தும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் விரோதப் போக்கு தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்களே பொறுப்பு என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும், இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமை குறித்தும்; 57 இஸ்லாமிய நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது அண்மையில் அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிககள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகப் பணியாhளர்கள், இஸ்லாமிய வைத்தியதுறைசார்ந்தோர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிர் இழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் எரிக்கப்பட்டமை தொடர்பில் ஆதங்கங்களையும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், உலமா சபை உட்பட சில பிறமத அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம் ஜனாசாக்களை தகனம் செய்யாது உலக சுகாதார வழிகாட்டால்களின் அடிப்படையில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன, மதவாத்தின் பிடிக்குள் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சிக்குண்டுள்ளதா? முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படாமையின் பின்னணியில் சுகாதாரக் காரணங்கள் தவிர்ந்த வேறு காரணங்கள் பின்னணி செலுத்தியுள்ளதாக என்ற கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியலின் சுயநலப் போக்கும், அரசியல் பலவீனமும், சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், இராஜதந்திரமாக கையாள்வதிலும் உள்ள அலட்சியமும் சவால்களை எதிர்கொள்வதற்கு தடைகளாக காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாட்டில்; ஏற்பட்டுள்ள நிலைமை என்பன தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ அலரி மாளிகையில் கடந்த 04ஆம் திகதி ஏற்பாடு செய்த கூட்டத்தை மு.கா. மற்றும் அ.இ.ம.கா ஆகிய கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க.யின் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது விட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது என தேசிய அரசியல் பரப்பில் பாராட்டப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைமைப் பற்றி பலமாக விமர்சித்து வந்த பெரும்பான்மை அரசியல்வாதிகள் பலர் தற்போது தமிழ் Nசிய கூட்டமைப்பின் மீது புகழ்மாலை பொழிவதையும் காணமுடிகிறது.

இந்நிலையில், பிரமதரின் கூட்டத்தைப் பகிஷ்கரித்தமைக்கான காரணங்களை முஸ்லிம் காங்கிரஸ{ம், மக்கள் காங்கிரஸ{ம் ஏனைய முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்; தெரிவித்து அறிக்கை விட்டாலும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எழுத்துமூலமாக அறிக்கையை, ஆவணத்தை பிரதமரிடம் கையளிப்பதற்கும் அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் மௌனம் காக்காது அவை தொடர்பில் பேச வேண்டிய இடத்தில் பேசவும் பகிரங்கப்படுத்த வேண்டிய இடத்தில் பகிரங்கப்படுததவும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது நன்மையாக அமையும் என்பது பொதுவான கருத்தாகவுள்ளது.

இதேவேளை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சில முஸ்லிம் பிரமுவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில்தான் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், ஏனையவர்களினதும் ; இராஜதந்திரச் செயற்பாடுகள் தோல்வி கண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறக்கின்ற முஸ்லிம் நபர்களின் உடல்கள் எரிக்கப்படும் நிலைமைகள் உருவாக்கியிருக்கிறது.

இதை எழுதும் நேரம் வரை இலங்கையில் 915 பேர் நோய்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 9 பேர் மரணித்துள்ளனர். மரணித்துள்ள ஒன்பது பேரில் 4 பேர் முஸ்லிம்கள் ஆவர். முதலாம் முஸ்லிம் நபர் நீர்கொழும்பு பலஹத்துறையைச் சேர்ந்தவர்.

இரண்டாம் நபர் கொழும்பு மருதானையைச் சேர்ந்தவர்.
மூன்றாம் நபர் தெஹிவளை –கல்கிஸையைச் சேர்ந்தவர்
இறுதியாக மரணித்தவர் கொழும்பு மோதரையைச் சேர்ந்தவர்.

மரணித்த இந்நான்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொதுவான உலக ஒழுங்கிற்கு, வழிகாட்டல்களுக்கு ஏற்ப நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகள் இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ளப்பட்டபோதிலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தது. எந்தவொரு முயற்சியும் பயனிக்காது இந்த நான்கு நபர்களின் ஜனாஸாக்களும் தகனம் செய்யப்பட்டன.

முஸ்லிம் உடல்களை தகனம் செய்யாது அடக்குவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வி கண்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டமாக நீதியின் மூலம் நியாயம் பெறுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.. அதுதான் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய உயிர் இழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் கவுன்சிலின் மனு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாது ஆஜராகவுள்ளமை முஸ்லிம் சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக உள்ளதையும் காண முடிகிறது.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல ஜனாதிபதி சட்டத்திரணிகள் இருந்தும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையை நீதியின் மூலம் வென்றெடுப்பதற்கு தற்போது விடுதலைப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தமிழ் அரசியல் பரப்பில் விமர்ச்சிக்கப்பட்டு வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முன்னுதாரணம் வரலாற்றுப் பதிவாக அமையும் என்பதோடு முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை வெற்றிகொள்வதற்கு மேற்கொள்ளப்படுகின்ற இராஜதந்திர நடவடிக்கைகள் தோல்வி காணும் நிலையில் நீதி வெல்லும் எனும் நம்பிக்கையும் வெற்றி பெறுமாக என்பதை நீதிமன்ற தீர்ப்புக்களே தீர்மானிக்கும்.

எம்.எம்.ஏ.ஸமட் – வீரகேசரி – 16.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here