இந்த நாட்டின் உறுதியான தலைமைத்துவம் சஜித் பிரேமதாசதான் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்துவிட்டது. -கலாநிதி வி.ஜனகன்-

0
37

இம்முறை பாராளுமன்றத் தேர்தல் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.

இந்த மாற்றம் காலத்திற்கேற்ற மாற்றமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இளம் தலைவரான சஜித் பிரேமதாசவின் தலைமையில் நிச்சயமாக ஒரு முக்கியமான கட்டத்திற்கு இலங்கை நகரப் போகின்றது என்பதனை இன்றைய தலைமுறை உணர்ந்துவிட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

கொம்பனி வீதி கியூ லேனில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும்
பொதுக்கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

கலாநிதி வி.ஜனகனின் நண்பரான அனுஷன் (Bro) மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் ஏற்பாடு
செய்யப்பட்ட குறித்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கொழும்பு மாவட்ட வேட்பாளர் ராம் உள்ளிட்ட
கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி வி.ஜனகன், “மிக நுட்பமாக சிந்திக்கக் கூடிய
இளைஞர்களும், யுவதிகளும் ஒன்றாக இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்திக்
கொண்டிருக்கின்றார்கள்.

அந்த கூட்டணியிலேயே நாங்களும் உங்களுக்காக மேடைகளில் நிற்கின்றோம். இந்த நாட்டில் தமிழர்கள்,
முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணக்கருவுடன் முஸ்லிம்
தலைவர்களும், தமிழ்த் தலைவர்களும், சிங்களத்தலைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.

ஆகவே, கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தங்களுடைய
பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், எதிர்காலத்திற்கு தேவையான விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தலைமை ஐக்கிய மக்கள் சக்திதான் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்.

எனவே தமிழ் பேசும் மக்களினதும், சிங்கள மக்களினதும் இருப்புக்காக முன்னின்று உழைக்கக் கூடிய தலைவர் சஜித்
பிரேமதாச மட்டுமதான் என்று உறுதியாகிய பின்னரே நாங்களும் அவருடன் ஒன்றிணைந்து பயணிக்க
ஆரம்பித்துள்ளோம்.

எனவே, இம்முறை பாராளுமன்றத் தேர்தலை தமிழ் பேசும் மக்களின் தேர்தலாகவே நாம் கருத வேண்டும்.

அதாவது, எங்களுடைய இந்த தேர்தலை நாங்கள் தமிழ் பேசும் மக்களின் வெற்றித் தேர்தலாக மாற்றியமைக்க வேண்டும்
என்று உங்களிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இலங்கை மக்கள் எடுக்கப் போகும் தீர்மானத்தின் அடிப்படையில சஜித் பிரேமதாசவின்
தலைமையில் புதிய யுகம் ஒன்று இலங்கையில் ஆரம்பமாகப் போகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிகாலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களைப்
போன்று எதிர்வரும் ஐந்து வருடங்கள் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய யுகம் ஒன்று ஆரம்பமாகும்.

இந்த புதிய யுகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக கரம் ​கோர்த்து அவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று உறுதியளிக்கிறேன்.

அதேவேளை, ஐக்கிய இலங்கையை மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கூறு போட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பனை செய்வதற்கு நினைக்கின்ற மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அணியினரை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இன்று மஹிந்த தரப்பினரின் வெற்றி அவர்களின் முன்பாகவே கரைந்து போய்க் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று விடலாம் என்ற பேராசை கொண்ட இறுமாப்புடன் மஹிந்த தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தார்கள்.

அந்த பேராசையுடன் தேர்தல் திருவிழாவை ஆரம்பித்தார்கள். ஆனால் காலப் போக்கில் அந்த பேராசை நிராசையாக மாறிவிட்டது.

மஹிந்த அணியினரை விட நாட்டு மக்கள் தெளிவானவர்கள் என்று கிரமமாக வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் பிரச்சினைகள் அதிகரித்து வருவதை உணர்ந்துகொண்டுள்ளார்கள்.

தொழில்வாய்ப்பின்மை, அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் நெருக்கடிகள், மக்களின் சமூக பிரச்சினைகள், மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் மற்றும் வாழ்வாதார நெருக்கடிகள் என்பன உச்சமடைந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்து வருகிறார்கள்.

பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கும் போது ஐந்தாயிரம் ரூபாவைக் கூட சரியாக வழங்க முடியாதவர்கள், நிர்வாக முடக்க காலத்தில் மின்சாரத்தைக் கூட இலவசமாக வழங்க முடியாமல் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியவர்கள், மாணவர்களுக்கு ஒரு நேர உணவை கூட வழங்க முடியாதவர்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி பாடசாலைகளை திறந்து விட்டுள்ளார்கள்.

இவர்கள் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் இருண்ட யுகத்தில் நாட்டை ஆளப் போகிறார்களா?

இலங்கையை அபிவிருத்தி செய்வதில் அவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. வெறுமனே இந்த நாட்டை கூறு போட்டு வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியிலேயே மீண்டும் ஈடுபடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

அதற்காகவே பொதுமக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி இந்த தேர்தல் காலத்தில் மக்களை திசை திருப்பப் பார்க்கின்றார்கள்.

இந்த பிரிவினைவாத கூட்டத்தினருக்கு பாடம் புகட்டுவதற்கே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அவரின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

இம்முறைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு என்னவென்றால், இந்த நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அரிய வாக்கு உங்களின் ஒருவிரல் புரட்சியினால் ஏற்படப் போகின்றது.

இந்த அரிய வாய்ப்பினை கொழும்பில் இருக்கும் அனைத்து வாக்காளர்களும் பெற்றுள்ளார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள் என்றும் கலாநிதி வி.ஜனகன் குறித்த மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here